search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி வீராங்கனை கோமதி"

    திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சதி நடப்பதாக அவரது அண்ணன் பேட்டியளித்துள்ளார்.
    திருச்சி:

    கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2.70 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோமதி திருச்சி அருகே உள்ள முடி கண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு ஏராளமான பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்தன.

    தமிழக அரசு சார்பில் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் நிதியுதவி வழங்கி பாராட்டு விழாக்களும் நடத்தப்பட்டு கோமதி கவுரவிக்கப்பட்டார். ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு சொந்த ஊரான முடிகண்டத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பதக்கம் வென்ற கோமதி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திடீரென கோமதி மீது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அவர் ஆசிய தடகள போட்டியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ‘நான்ட் ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கு முன்பும், பின்பும் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்படும். கோமதிக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அடுத்த நிலை சோதனையான ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் பறிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய விபரம் குறித்து அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க மருந்து சர்ச்சையை வீராங்கனை கோமதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது வாழ்க்கையில் ஒரு போதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்ற அவர் ‘பி’ மாதிரியை சோதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சுப்பிரமணி

    வீராங்கனை கோமதி மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து திருச்சியில் முடிகண்டத்தில் உள்ள அவரது அண்ணன் சுப்பிரமணியிடம் கேட்டபோது அவர் இதனை முற்றிலும் மறுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த எனது சகோதரி கோமதி அவ்வாறு ஊக்க மருந்தை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. இது பற்றி நாங்கள் அவரிடம் கேட்ட போதும் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். நாங்கள் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.

    கோமதி இதற்கு முன்பு பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது அடுத்த கட்ட வெற்றிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் கோமதியின் லட்சியக்கனவு.

    இந்த நிலையில் இது போன்ற புகார்கள் கோமதியின் லட்சியத்திற்கு தடையாக அமையும். மேலும் அடுத்த கட்டமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க நடக்கும் சதியோ என்றும் எண்ண தோன்றுகிறது. ஆனாலும் ‘பி’ பரிசோதனைக்கு அவர் இந்திய தடகள கூட்டமைப்புக்கு மேல்முறையீடு செய்துள்ளார். இதில் அவர் நிச்சயம் வெற்றி பெற்று தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பார்.

    அதற்குள் சிலர் இதை பெரிதாக்குவது, எங்களை மன உளைச்சல் அடைய செய்துள்ளது. எதையும் இறுதி செய்வதற்குள் தவறான தகவல்களை பரப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianAthleticChampionships #Gomathi
    சென்னை

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    அவருக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார். காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்து, அவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களைப்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வழிவகை செய்து தந்துள்ளார்.

    அந்த வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிமுக சார்பில் தடகளப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கோமதி மாரிமுத்து அவர்களுக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  மேலும் இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.  #AsianAthleticChampionships #Gomathi #ADMK

    ஏழ்மையின் வேதனையே ஆசிய தடகள போட்டியில் சாதனை படைக்க தூண்டியதாக தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியுள்ளார். #AsianAthleticChampionships #Gomathi
    சென்னை:

    கத்தாரில் நடந்த ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் கோமதி. தாயகம் திரும்பிய அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. சென்னை வேலம்மாள்பள்ளி மற்றும் மயிலாப்பூர் தமிழிவியல் நிறுவனம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கோமதி கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள சிறிய கிராமம். அப்பா மாரிமுத்து கூலி வேலை செய்துவந்தார். அம்மாவுக்கும் படிக்கக்கூட தெரியாது. படிக்கும்போது ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடுவேன்.

    பின்னர் பயிற்சிக்காக அதிகாலை 4.30 மணிக்கு என் அப்பா அழைத்து செல்வார். கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக செல்லவேண்டும். மின் விளக்கு வசதி கிடையாது. பல நாள் டார்ச் வெளிச்சத்தில் தான் சென்றிருக்கிறோம். மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுவோம்.

    நான் நன்றாக சாப்பிட்டு தெம்மாக ஓடவேண்டும் என்பதற்காக அப்பா பல நாள் பட்டினி கிடந்துள்ளார்.

    திருச்சி கல்லூரியில் படித்த போது மேரி எனது தோழி. இருவரும் ஓட்டப் பந்தயங்களில் ஓடுவோம். அவர் போலீஸ் வேலையில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டார். அவர்தான் சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் என் தந்தையின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது.

    ஆனால் மேரிதான் எனக்கு ஆறுதலாகவும், ஊக்கமாகவும் இருந்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்தேன்.

    ஆசிய தடகள போட்டியில் ஓடியபோது கிழிந்த ஷுவை போட்டுக்கொண்டு ஓடினேன். வெற்றிபெற வேண்டும் என்ற வெறியோடு ஓடியதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.



    தங்கம் வென்றதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நேரத்தில் என் தந்தையும் இருந்திருதால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் தமிழகம் சார்பாக விளையாட துறை ரீதியாக எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மாநில அரசு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஏழ்மையின் வேதனைதான் என்னை சாதிக்க தூண்டியது.

    தொடர்ந்து போராடி தமிழகம் சார்பில் விளையாடினேன். நான் வேறு மாநிலத்தில் அரசு வேலைபார்ப்பதால் தமிழகம் சார்பாக விளையாட பல பிரச்சினைகளை சந்தித்தேன். விடாமுயற்சி, தொடர் உழைப்பால் வெற்றி பெற்றுள்ளேன்.

    என்னைப்போல் பல வீராங்கனைகள் ஏழ்மையில் இருக்கிறார்கள். வெளி உலகுக்கு வராமல் விடுதிகளில் தங்கி சரியான உணவு கூட கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கும் அரசு உதவிகள் கிடைத்தால் இன்னும் பல பெண்கள் தங்கம் வெல்வார்கள்.

    தொடர்ந்து கடும் பயிற்சி மேற்கொண்டு சிறந்த விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும். குறிப்பாக பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் விளையாட வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி எடுக்கவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால் நிச்சயம் தங்கம் வெல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #AsianAthleticChampionships #Gomathi
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianAthleticChampionships #Gomathi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

    வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.



    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி.

    திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

    தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  #AsianAthleticChampionships #Gomathi 
    சாதாரண பின்னணியை கொண்டவர்கள் சாதிக்க முடியாது என்பதை தவிடு பொடியாக்கி தோகாவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய தங்க மங்கை கோமதி, சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக உள்ளார். #AsianAthleticChampionship #Gomati
    திருச்சி:

    ஏழ்மையை மட்டுமே பின்னணியாக கொண்ட பலரும் அதனை துச்சமென தூக்கி எறிந்து லட்சியத்தை எட்டிப் பிடித்து எல்லையில்லா இந்த உலகில் தனி முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் புதிய விருட்சமாய் இணைந்துள்ளார் மலைக்கோட்டை மாநகரின் தங்க மங்கையாக அடையாளம் காணப்பட்டுள்ள கோமதி.

    சற்றும் மனம் தளராத தன்னம்பிக்கையை உந்து சக்தியாக கொண்டு எள்ளி நகையாடுபவர்களுக்கு முன்பு சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு வறுமையை தோற்கடித்து தடகள விளையாட்டில் தங்கம் வென்ற கோமதி தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

    இந்த சாதனைக்கு சொந்தக்காரர், கத்தாரில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள திருச்சி வீராங்கனை கோமதி தான். 30 வயதான கோமதி மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றில் முதல் இடம் பிடித்து, பைனலில் அபாரமாக செயல்பட்டு (2 நிமிடம், 2.70 விநாடி) தங்கப்பதக்கத்தை பெற்றார்.

    இதற்கு முன் பாட்டியாலாவில் நடந்த பெடரே‌ஷன் கோப்பை தடகள போட்டியில் 800 மீட்டர் தொலைவை 2 நிமிடம் 3.21 விநாடிகளில் கடந்ததே அவரது முந்தைய சாதனையாக இருந்தது. அதை ஆசிய தொடரில் முறியடித்து அசத்தியுள்ளார்.

    சர்வதேச அளவில் கோமதி வெல்லும் முதல் தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில், தொடக்கத்தில் வாழ்க்கை எனக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. ஆனாலும் என் திறமை மீது எந்த சந்தேகமும், எப்போதுமே இருந்ததில்லை. தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது.

    இந்த போட்டியில் கடைசி 150 மீட்டர் வரை பின் தங்கி இருந்தேன். அதன்பிறகுதான் வேகமெடுத்தேன். வெற்றிக் கோட்டை கடந்த பிறகு சிறிது நேரம் கழித்துதான் தங்கம் வென்றதை உணர்ந்தேன் என்றார்.

    கோமதியின் சொந்த ஊர் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள முடிகண்டம் என்ற கிராமம். தந்தை மாரிமுத்து, விவசாயி. தாய் ராசாத்தி. சகோதரிகள் லதா, திலகவதி. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சகோதரர் சுப்பிரமணி. கோமதிதான் இளைய மகள். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் படிக்கும் போது அவரது தோழி சுருதியை பார்த்து ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 20 வயதில் தான் பயிற்சியை தொடங்கினார்.

    புனேவில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் 7-வது இடம், 2015-ல் சீனாவில் நடந்த போட்டியில் 4-வது இடம் பிடித்தார். தந்தை மாரிமுத்து, புற்றுநோய் பாதிப்பாலும், பயிற்சியாளர் காந்தி மாரடைப்பு ஏற்பட்டும் இறந்தது கோமதியின் தடகள வாழ்க்கையை வெகுவாக புரட்டிப்போட்டது.

    பயிற்சியின் போது கோமதிக்கும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. இது அவருக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இப்படி தொடர்ந்த பிரச்சனைகளால் 2 ஆண்டுகள் பயிற்சி பெறாமல் இருந்தார். அதனால் ஆசிய விளையாட்டு போட்டி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்கியவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். இப்போது பல்வேறு தடைகளை தாண்டி ஆசிய போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பெங்களூரில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அவர் அப்பணியில் சேர்ந்துள்ளார்.


    மகள் கோமதி வென்ற பதக்கங்களை தாங்கி அழகு பார்க்கும் தாய் ராசாத்தி.

    கோமதியின் சாதனை குறித்து அவரது தாய் ராசாத்தி கூறியதாவது:-

    சிறு வயது முதலே விளையாட்டில் குறிப்பாக ஓட்டப் பந்தயத்தில் கோமதி ஆர்வம் மிக்கவராக இருந்தார். தினமும் காலையில் எழுந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு சென்று பயிற்சி பெற்று வந்தார். அர்ப்பணிப்புமிக்க ஆர்வம் தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கிராமத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    சிறுவயது முதல் வறுமை, கஷ்டங்களை மட்டுமே பார்த்து வளர்ந்த கோமதி பலமுறை அவரது அப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் தவித்தபோது, என்னுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள் என்று கதறி அழுது இருக்கிறார்.

    அதன்பிறகு தான் கோமதியை கல்லூரியில் படிக்க வைத்தோம். ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெற்று அவ்வப்போது போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கத்தை கொண்டு வருவார். அதன் பிறகு எங்களுக்கே ஆர்வம் வந்தது. இதையடுத்து கோமதியின் விருப்பப்படி விட்டு விட்டோம்.

    தற்போது பட்டிக்காட்டில் பிறந்து எங்கேயோ நடந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றதை எண்ணி பெருமைப்படுகிறோம். ஆனால் ஒரே ஒரு குறை, இதையெல்லாம் பார்க்க அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்த அவரது அப்பா இல்லை என்பதுதான் என்று கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    கோமதியின் தாய் ராசாத்தி, சகோதரர் சுப்பிரமணி.

    கோமதியின் சகோதரர் சுப்பிரமணி கூறியதாவது:-

    பெண் பிள்ளை என்பதால் விளையாட்டுக்கு அனுப்பக்கூடாது என்று என் தந்தையிடம் நான் கூறினேன். ஆனால் கோமதியின் ஆர்வத்தை கண்டு கொண்ட என் தந்தை குடும்பம் வறுமையில் இருந்த நிலையிலும் தேவையான உதவிகளை செய்து கோமதியை ஊக்கப்படுத்தினார். அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

    அதற்கேற்ப கோமதி தினமும் அதிகாலையிலும், மாலையில் பள்ளி முடிந்த பிறகும் தவறாமல் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். எப்போதும் பயிற்சி என்றே இருந்ததால் கிராமத்தில் அவருக்கு தோழிகள் கூட கிடையாது. பள்ளி நேரத்தை தாண்டி அவரது எண்ணம், செயல் எல்லாமே ஓட்டம் என்பதாகவே இருந்தது.

    அவரது ஆர்வத்தை பார்த்த அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சியாளர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்த பிறகு அவருக்கு ஓட்டத்தில் நல்ல பயிற்சி கிடைத்தது. முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு என் தங்கை கோமதியும் உதாரணம் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

    சாதனை படைத்த கோமதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ச.ம.க. தலைவர் சரத்குமார், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கனிமொழி எம்.பி. உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சாதாரண பின்னணியை கொண்டவர்கள் சாதிக்க முடியாது என்பதை தவிடு பொடியாக்கி தோகாவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய தங்க மங்கை கோமதி, சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக உள்ளார். #AsianAthleticChampionship #Gomati
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #AsianAthleticChampionship #Gomti
    திருச்சி:

    கத்தார் நாட்டில் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    சாதனை படைத்த கோமதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் ஆகும். இவரது தந்தை மாரி முத்து, தாய் ராஜாத்தி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். லதா, திலகா என்ற இரண்டு சகோதரிகளும், சுப்பிரமணி என்ற சகோதரரும் உள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத்தில் பள்ளி படிப்பை முடித்த கோமதி பின்னர் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி படிப்பை முடித்தார். பின்னர் வருமான வரித்துறையில் வேலை கிடைத்து பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

    சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கோமதி கடந்த 2013-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். தற்போது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதனை கோமதியின் சொந்த ஊரான முடிகண்டம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி அவரது சகோதரர் சுப்பிரமணி கூறுகையில், எனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோமதியின் பயிற்சியாளரும் இறந்து விட்டார்.

    இருந்த போதிலும் மனம் தளராமல் சிறந்த பயிற்சி பெற்று தற்போது கோமதி சாதனை படைத்துள்ளார். இது அவரது தன்னம்பிக்கைக்கும், பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் ஊருக்கு சரியான பஸ் வசதி கிடையாது. ஆனாலும் கோமதி பயிற்சிக்காக தினமும் 15 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்வார். அதுவே அவரது உடற்பயிற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது.

    அவரது சாதனை இந்தியாவிற்கு மட்டுமல்ல, திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க கூடியதாகும். #AsianAthleticChampionship #Gomti
    ×